சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

சண்டகோழி 2 விமர்சனம்

 


சண்டகோழி 2 விமர்சனம்

விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2.
இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது.

கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் பரிமாறப்பட்ட கறிவிருந்தில் சின்ன வாய்ச்சண்டை பெரிதாகி வெட்டுகுத்தாகிப்போகிறது. பலர் கொல்லப்படுகிறார்கள். வரலட்சுமியின் கணவரும் கொல்லப்படுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வரலட்சுமி கணவரை கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்ல ஆள் அனுப்புகிறார். அதில் ஒருவர் மட்டும் தப்பிக்கிறார். இந்த பகை அப்படியே இருக்கிறது.
இந்த சூழலில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோயில் திருவிழாவை மீண்டும் எடுத்து நடத்த திட்டமிடுகிறார்கள். திருவிழாவில் எப்படியும் மிச்சமிருக்கும் ஒருவரையும் கொன்றுவிட வரலட்சுமியின் டீம் துடிக்கிறது.

இந்த சூழலில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகிறார் விஷால். ஊரில் வாயாடி கீர்த்தியை பார்க்கிறார். காதல் கொள்கிறார். அந்த காதல் கை கூடியதா… திருவிழா சிறப்பாக நடந்ததா… வரலட்சுமியின் எண்ணம் நிறைவேறியதா… ராஜ்கிரண் என்ன ஆகிறார்… இதுதான் மிச்சம் கதை.

படம் முழுவதும் ஒரு திருவிழா பின்னணியில் நடக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் ஆட்களாகவே தெரிகிறார்கள். முதல் பாகத்தில் நடித்த மீராஜாஸ்மின் கேரக்டரை எப்படியாவது மிஞ்சவேண்டும் என்று சொல்லி சொல்லியே கீர்த்தியை நடிக்க வைத்திருப்பார் போல இயக்குனர்… பல இடங்களில் கீர்த்தி ஸ்கோர் வாங்கினாலும் சில இடங்களில் செயற்கைத்தனமாக தெரிகிறது. கீர்த்தியை அவர் மாதிரியே நடிக்க சொல்லியிருந்தால் கூட இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.

வரலட்சுமி… புதுசாக முயற்சித்திருக்கிறார்… ஆவேசம்… ஆத்திரம்… வீரம் என பல பரிணாமங்களில் வரலட்சுமி வித்தியாசம் காட்டினாலும் சில இடங்களில் ‘காஞ்சனா’சரத்குமார் எட்டிப்பார்க்கிறார்…

விஷால்… வழக்கமான ஹீரோயிசம்… சொல்லி வைத்தார்போல வசனங்கள்… அப்பா வெட்டுபட்டு உயிருக்கு போராடும்போது காப்பாற்ற முயற்சிக்காமல் அரிவாளை எடுத்து அரைவட்டம் போட்டு வசனம் பேசும் ஹீரோயிச பில்டப்புகளை தவிர்த்திருக்கலாம்… சண்டைக்காட்சிகளில் தேறியிருக்கிறார்… காதல் காட்சிகளிலும், நடனகாட்சிகளிலும் விஷால் ஓகேதான்…

ராஜ்கிரண்… வசனமே இல்லாமல் நடக்க விட்டும்… கும்பிட விட்டுமே பல இடங்களில் அவர் காட்சிகளை நகர்த்தியிருந்தாலும் மிக கம்பீரமாக இருக்கிறது அந்த காட்சிகள்… மகனின் விருப்பத்தை அறிந்து கீர்த்தியை தேடிப்போய் பேசும் காட்சியில் அத்தனை பாசம் அது ராஜ்கிரண் என்கிற ஆளுமையால் மட்டுமே முடியும்…

முனீஸ்காந்த் படத்துக்கு படம் ஸ்கோர் வாங்கிக் கொண்டே போகிறார்… காமெடி நடிகராக வலம் வந்தாலும் பல இடங்களில் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் நிரூபிக்கிறார்.

இயக்குனர் லிங்குசாமி… முதல்பாக வெற்றியை எப்படியாவது நாமே முறியடித்து விடவேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்… முதல் பாகம் வந்தபோது விஷாலுக்கு இரண்டாவது படம்… மிகப்பெரிய ஆளுமை ராஜ்கிரண், பேசப்படும் நாயகியாக மீராஜாஸ்மின் இவர்கள்தான் அந்த கதைகளத்தை ஆக்ரமித்திருந்தார்கள். ஆனால், இப்போது விஷால் என்ற நடிகர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆளுமை… மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் இருந்து கொஞ்சமேனும் அதிகமாக இவருக்கு கொடுத்தாகவேண்டிய கட்டாயம் இயக்குனருக்கு… ஹீரோயிச விவகாரங்களில் அந்த காரம் இனிப்பு புளிப்பெல்லாம் கலந்திருப்பது படத்தை ரசிப்பவர்களுக்கு புரியாமல் இருக்காது… அதேநேரம், திரைக்கதையில் ஒரு திருவிழா பின்னணியில் கதைக்களத்தை வைத்து நூற்றுக்கணக்கில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை வேலைவாங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ஒருபடி மேலே போய் பட்டைய கிளப்பியிருக்கும்.

சக்திவேல் ஒளிப்பதிவில் ஒரு திருவிழாவுக்குள் போய்வந்த திருப்தி. கேமரா கோணங்கள் நம்மையும் கூடவே அழைத்து செல்கிற மேஜிக்.

யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு ரகம் என்றால் வரலட்சுமியை காட்டும்போதெல்லாம் ஒரு பீஜியம் போட்டு பிபி எகிற வைக்கிறார். பிரவீண் எடிட் கத்திரி முதல் பாகத்தில் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்.
மொத்தத்தில் முதல் பாகத்தை மிஞ்ச முடியாமல் போனாலும் குடும்பத்தோடு ரசிக்கும் இடத்தில் சண்டகோழி 2

கோடங்கி

527 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன