வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

சிறார் குற்றவாளிகள் செய்கிற கொடூரங்களை செய்திகளில் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு பதட்டம் ஏற்படும்… அந்த குழந்தைகள் தப்பித்தவறியும் நமக்கு வேண்டியவர்களாக இருக்கக்கூடாது என்று மனசு வேண்டிக்கொள்ளும்… ஆனால் அம்மா அப்பா இல்லாத சூழலில் தம்பியை நல்லபடியாக வளர்க்கப்போராடும் அண்ணன்… அண்ணனின் கெடுபிடி பாசத்தை உணராத தறுதலை தம்பி இந்த காம்பினேஷனில் உருவான கதைதான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன்.
போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி காக்கி யூனிபார்முக்கு கொஞ்சமும் கவுரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூழலில் தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்படும்போது உயிராய் நேசித்த சொந்த தம்பியையே சுட்டுக் கொல்கிறார்.

அந்த கொலைக்கு பிராயச்சித்தம் தேட புறப்படும்போது சிறார் குற்றவாளிகள் என்ற மிகப்பெரிய நெட்வொர்க் தெரிகிறது… அதன் தலைவனை தன் பாணியில் எப்படி எதிர் கொள்கிறார்… கடைசியில் யார் ஜெயித்தார்கள்… என்பதுதான் மிச்ச கதை.
சிறார் குற்றவாளிகள் பற்றிய பின்னணி… கல்வி எத்தனை முக்கியம்… காவல்துறைக்கு பொதுமக்களிடம் எப்படி நன்மதிப்பு கிடைக்கும் என்ற பல டிப்ஸ் திரைக்கதையில் ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள்.

அதேநேரம் படம் தொடங்கியதில் இருந்து முடியும்வரை திரைக்கதையில் எங்கே போய் எங்கே வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாததால் பல இடங்களில் படம் நகராமல் நின்று கொள்கிறது…

ஹீரோ என்றால் முதலில் வில்லனிடம் அடிவாங்கி மயங்கி விழும் நிலையில் திடீரென வேகம் வந்து வில்லனை அடித்து துவம்சம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதிபோல ஆனால்… இந்த படத்தில் அதை மட்டும் கொஞ்சம் மாற்றி ஹீரோ அடிவாங்கி எழுந்திருக்க முடியாமல் விழுந்த நேரத்தில் சிறார் குற்றவாளிகளாகிப்போன சிறுவர்கள் திடீரென உள்ளே புகுந்து வில்லனை புரட்டி பிய்த்து எடுப்பது புதுசு.

திமிரு புடிச்சவன் படத்திலேயே எல்லாருக்கும் ரொம்ப புடிச்சவ நிவேதா பெத்துராஜ்தான்… போலீஸ் எஸ்.ஐ., ஆக யூனிபார்ம் போட்டு புல் பார்ம்ல வந்து நிக்கும்போதும் சரி…

டி சர்ட்ல பிரியாணி டிரம்ல பிரியாணி அடிக்கும்போதும் சரி… புல்லட் ஓட்டும்போது சரி… தூக்கத்துல பெட்ல அலறி எந்திருக்கும்போதும் சரி… புடவை கட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள நுழையும்போதும் சரி…

எல்லாத்துக்கும் மேல ஓடுற டிரைன்ல பேட்ரி லெவல் எறங்கிப்போன விஜய் ஆண்டனிக்கு வாயோடு வாய் வைச்சி முத்தம் கொடுத்து விஜய் ஆண்டனிக்கும் சரி பாக்குற ஆடியன்சுக்கும் சரி ஏகத்துக்கு எனர்ஜி ஏத்திவிட்டபோதும் சரி… டிக்கெட் குடுத்த காசுக்கு திருப்தியா ரசிகனை அனுப்பி வைக்கிறீயேடியம்மா…

அப்படி வாயோடு வாய் நிவேதா ஏத்தி விட்ட எனர்ஜிய பொசுக்குன்னு ‘மருத்துவ முத்தத்துல’ விஜய் ஆண்டனி சேக்கும்போது பாத்தவனுக்கெல்லாம் வரும்பாருங்க ஒரு கோவம் அது கஜா புயல் மாதிரி சொன்ன இடத்தை விட்டு வேற எடத்து அடிச்சிட்டு போயிடும்…
முதல்முறையா ஒரு திருநங்கையை போலீஸ் எஸ்.ஐ., கேரக்டர்ல நடிக்க வைச்சி சபாஷ் வாங்கிக்கிட்டாரு விஜய் ஆண்டனி. அதேநேரம், நான் ரொம்ப சோர்ந்து போகும்போதெல்லாம் திருநங்கைகளை பார்த்துதான் இந்த சமூகத்துல எல்லாத்தையும் பேஸ் பண்ண கத்துக்கனும்னு ஒரு வேகம் வரும் அதுக்கு திருநங்கைகள்தான் எனக்கு ரோல் மாடல்னு சொல்லாம சொல்லி திருநங்கைகளுக்கும் ஒரு தனி கெத்து ஏத்திவிட்டிருக்கார் விஜய் ஆண்டனி.

ரொம்ப வருஷமா ஏட்டாவே இருந்து ரிட்டயர்டு ஆகிப்போகும் பல போலீஸ் ஏட்டுக்கள் மனசுல இருந்த ஏக்கம் இந்த படத்துல சம்பத்ராம் ஏட்டுக்கு தேசிய கொடி ஏத்துற மரியாதை கிடைச்சி தீர்ந்திருக்கும்… ஆக சம்பத்ராம் மூலமா நிஜ போலீஸ் ஏட்டுக்கள் மத்தியிலயும் விஜய் ஆண்டனி மரியாதைய வாங்கிக்கிறார்.

இளம் குற்றவாளிகள் பெரும்பாலும் உருவாவதற்கு காரணம் அந்த வயசுல வீட்ல பெற்றோர் எப்பவும் நெகட்டிவ் வார்த்தைகளை சொல்லி பசங்களை திட்டிகிட்டே இருக்குறதும்… அது பிடிக்காம வீட்டை விட்டு ஓடும் சின்ன பசங்களை நல்ல வார்த்தை மாதிரி தேனுக்குள்ள விஷம் தடவி சில சமூக விரோதிகள் தவறான காரியத்துக்கு அவங்களை பயன்படுத்திகிறதையும் ரொம்பவே போல்டா சொல்லி பசங்க அப்பா அம்மா சைடுலயும் தனக்கு ஒரு இமேஜ் ஏத்திக்கிறார் விஜய் ஆண்டனி.

எல்லா பசங்களுக்கும் முதல் ஹீரோ அவனோட அப்பாதான்… தப்பே பண்ணாலும் அப்பா நமக்காக பைட் பண்ணி நம்பளை காப்பாத்திடுவாருன்னு ஒவ்வொரு பையனும் மனசுக்குள்ள அப்பாவ பத்தி ஒரு இமேஜ் வைச்சிருப்பானுங்க… இந்த படத்துலயும் அப்படி ஒரு காட்சி வருது… வயசு கோளாறுல கவுன்சிலர் பொண்ணு பின்னாடி சுத்தின ஒரு பையன கவுன்சிலர் ஊர்ல எல்லாரும் பாக்கும்போது யூனிபார்ம் எல்லாத்தையும் உருவிட்டு ஜட்டியோட நிறுத்தி வைச்சி அடிச்சிகிட்டிருப்பார்… அதை தட்டி கேட்க முடியாம அந்த பையனோட அப்பா அப்பாவியா நிப்பாரு… அப்பா ஹீரோ மாதிரி வந்து சண்ட போடுவாருன்னு பையன் பண்ண கற்பனை அங்க ஒடஞ்சி போயிடும்… அந்த பையன் சிறார் குற்றவாளியா மாறிப்போயிடுவான்… அப்பன மதிக்காம போயிடுவான்… ஆனா, அப்படி அப்பாவியா நின்ன அந்த அப்பாவுக்குள்ளயும் ஒரு வீரன் இருக்கான்… அவனுக்கும் கோபம் வரும்… எதிராளி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் தப்புன்னா தட்டிக்கேட்க முடியும்னு ஒரு இடத்துல காட்சிய வைச்சி எந்த கவுன்சிலர் அடிச்சி பையன அவமானப்படுத்தினானோ அதே கவுன்சிலரை அடிச்சி வெட்டப்போய் பையனோட துணிய வாங்கிட்டு வருவாரு அப்பா…

இதுல அப்பாவா நடிச்சது செந்தில்குமரன் என்ற பத்திரிகையாளர்…
சின்ன சின்ன வேஷங்களில் நடிச்சிகிட்டிருக்கிற அவரை இந்த படத்துல ஒரு பையனுக்கு அப்பாவா மாத்தி பைட்டு… டான்சுன்னு அடுத்த லெவலுக்கு ஏத்தி விட்டு பத்திரிகையாளர்கள் மத்தியிலயும் நல்ல பேரை எடுத்துகிட்டாரு விஜய் ஆண்டனி.

இப்படி எல்லா இடத்துலயும் விஜய் ஆண்டனி… விஜய் ஆண்ட்னி… விஜய் ஆண்டனின்னு வந்து நிக்குறதால பல நல்ல விஷயங்களை எடுத்திருந்தாலும் திரைக்கதை முழுக்க விஜய் ஆண்டனி நிறைஞ்சி ரொம்ப தெகட்டி ரசிக்க முடியாம போகுது…
பிச்சைக்காரன் ஹிட்டை மிஞ்ச வேண்டிய கதை… ஹீரோயிச திமிரு புடிச்சதால ஹிட்டுக்கு புடிக்காம போயிடுது…

மொத்தத்துல திமிரு புடிச்சவன்
ஹீரோயின் நிவேதாவின் திகட்டும் கவர்ச்சி!
ஹீரோ விஜய்ஆண்டனியின் பெறு(ரு)ம் முயற்சி!!
கணேசாவின் திரைக்கதையில் கடும் வறட்சி!!!

– கோடங்கி

700 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன