வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

 

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு!

பொள்ளாச்சியில் எழுந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன. குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் கசிய கசியப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. குற்றங்களின் தீவிரத்தைவிடவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது, அரசு அந்த வழக்குகளைக் கையாண்ட விதம்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து காவல் துறையினரும் விசாரணையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறை கண்காணிப்பாளர், ஆளும் கட்சியினருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டதும் காவல்துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்தியது.
..இது ஒருபுறமிருக்க அரசு உத்தரவிலுமே புகார் கொடுத்த பெண்ணின் பெயர் வெளியிட்டது நீதிமன்றம் வரை சென்று இழப்பீடு தர உத்தரவிடும் அளவுக்குச் சர்ச்சைக்குள்ளானது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தகவல் தரக்கூடாது என மிரட்டுவதற்காகவே இவை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது

இந்த நிலையில், பிரதானமான பெண் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மனநல மருத்துவர்கள் பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் இணைந்து `பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக்குழு’ என்கிற குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க பெண்களால் நடத்தப்படுகிற இந்தக் குழுவினரை பாதிக்கப்பட்டவர்கள் சட்ட உதவிக்காகவும், உளவியல் உதவிகளுக்காகவும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, வழக்கறிஞர்கள் அருள்மொழி, அஜிதா, சுதா ராமலிங்கம், உளவியலாளர் ஷாலினி, பத்திரிகையாளர் கவின் மலர் உள்ளிட்ட 28 முக்கிய பெண் பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 9994368566 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களையும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தக் குழுவில் யாரிடம் நம்பிக்கை கொண்டு பேச விரும்பினாலும், அதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இந்த எண் பெண் ஒருவராலே கையாளப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உளவியல் ரீதியாக மட்டுமில்லாமல், சட்ட உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் உதவத் தயாராக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படுகிற தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சி.பி.ஐ விசாரணையின்போது இவை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இந்தக் குழுவினரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் அல்லாமல் நேரில் சந்திக்க விரும்புவோர் உசேன் இல்லம், எஸ். 7, கொண்டிசெட்டி தெரு, சென்னை – 600001 என்கிற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சியில் மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

1,061 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன