திங்கட்கிழமை, மே 13
Shadow

ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு

 

தேனி தொகுதியில் அதிக அளவில் முறைகேடு நடந்ததற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்கிறார் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம்.

வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள்.

சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல வி‌ஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன.

இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்.

335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன