மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

151 Views

 

மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்காக வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட கனிமவளங்கள் அதிகம் நிறைந்த 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழக சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

இந்த தடை தீர்ப்புக்கு எதிராக சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே 8 வழிச்சாலை என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி அரசு செயல்பட்ட போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மக்கள் எதிர்ப்பும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் அதிக அளவில் இருந்ததால் 8 சாலை திட்டத்தை கைவிட்டு 6 சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில் கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து திட்டம் கிடப்பில் போனது.

இந்த சூழலில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மீண்டும் மெகா பலத்தோடு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

படுதோல்வி அடைய வைத்த தமிழக மக்களை மீண்டும் பதட்டப்படுத்துவதற்காக கிடப்பில் உள்ள 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் மத்திய மோடி அரசு கையில் எடுத்து உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதிலும் பிதமர் பதவி ஏற்ற மறு நாளே மோடி தமிழகத்தை வஞ்சிக்கத் தொடங்கி விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முழு பலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறார்கள். 8 வழிச் சாலை திட்டத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பாடுகள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்க தமிழகம் காத்து கிடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =