
ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள், உத்தரவுகளை பிறப்பித்து நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
இப்போது அதிரடியாக போலீசாருக்கு வார விடுமுறை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பதவி ஏற்றதும் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.
விவசாயிகளுக்காக ‘ரையத் பரோசா’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார்.
இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார்.
மேலும் ஆந்திராவில் 15 நாட்களுக்கு மண் அள்ள தடை விதித்தார். ஏனென்றால், ஆந்திராவில் மண் அள்ளுவது தொடர்பாக புதிய கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த அறிக்கையில், ‘புதிய அறிவிப்பின்படி ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்கள், துணை காவலர்கள், கான்ஸ்டபிள்கள், காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும். இதன் மூலம் 67,804 பேர் பயன்பெற முடியும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறை படுத்தப்படும்’ என்றார்.
இந்தியாவிலேயே போலீசாருக்கு வார விடுமுறை அறிவித்த முதல் மாநில அரசு ஆந்திரா என்பதும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
