
குளத்திலிருந்து வெளிவந்து கோடிகளை குவித்த அத்திவரதர்..!
அள்ளிக் கொடுத்த ரவுடி
போஸ் கொடுத்த நடிகை
அத்திவரதர் வரவால் நாட்டில் நிறைய சுபிட்சங்கள்
பொழியும் என்று சொன்னார்கள். அதெல்லாம் நடந்ததோ இல்லையோ, ஏராளமான நபர்கள் வீட்டில் பண மழை பொழிந்திருக்கிறது. ஆம், அர்ச்சர்கர்கள், காவலர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆகிய அத்தனை பேரும் விருந்தினர்களை உள்ளே அனுப்பி லட்சங்களை வாரிக் குவித்து இருக்கிறார்கள், 500 ரூபாய் வாடகை அறைகள் 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு கொள்ளை லாபம் பார்த்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் மெல்ல புகைய ஆரம்பித்து உள்ளது.

அத்திவரதர் தரிசனத்தில் தொடங்கிய விவகாரம்
டோனர் பாஸ் ரூ3000, வி.ஐ.பி பாஸ் ரூ4500, வி.வி.ஐ.பி பாஸ் ரூ.6000, அத்திவரதர் அருகில் நின்று தரிசனம் செய்ய ரூ10000 என்று ரேட் குறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பணம் எல்லாம் எங்கே போனது, யாரிடம் இந்த கணக்கு விவரங்கள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இதில் ஏராளமான போலிகள் உலவின. இது தரிசன நேரத்திற்கேற்ப இதைவிட கூடுதல் விலையில் விற்கப்பட்டதாம்.
அர்ச்சகர் தட்டில் ரூ.500 போட்டால், அத்திவரதர் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் பச்சையப்பாஸ் சில்க் பெயரில் அச்சிட்ட ஐந்து அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்களை அர்ச்சகர் கொடுப்பார். அதுவே 1000 ரூபாய் போட்டால் 10 அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்கள் கிடைக்கும்.

ஆனால் பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம் நடமாடும் நகைக்கடையாக வந்து விவிஐபி ஆக பூரண கும்ப மரியாதையுடன் அத்திவரதர் முன்பு அமர்ந்து தரிசனம் செய்த கண்கொள்ளாக் காட்சியை யாரும் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகை நயன்தாரா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் அத்திவரதர் சிலை முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து, 10 நிமிடம், 15 நிமிடம் தரிசனம் செய்தார்கள். இப்படி தரிசனம் செய்ய அர்ச்சகருக்கு ரூ10,000-, ரூ20,000 கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆர்த்தி கணேஷ், வரிச்சியூர் செல்வம், ரஜினிகாந்த், விஜயகாந்த், நயன்தாரா, ராஜாத்தி அம்மாள், தேவ கவுடா, சந்திரசேகர ராவ், எடப்பாடி பழனிசாமி, துர்கா ஸ்டாலின் -என்று ஏராளமான பேர் வந்தார்களே, அவர்கள் வருகையில் என்ன சுவாரஸ்யங்கள் என்று அர்ச்சகர்கள் சிலரிடம் விசாரித்தால்…

“இந்த தரிசனத்தில் எங்களுக்கு வரிச்சியூர் செல்வம்தான் அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதேபோல் நடிகை நயன்தாரா எங்ககூட நின்று போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. மத்தவங்களால பெருசா ஒண்ணும் பிரயோஜனமில்லை” என்று கிசுகிசுக்கிறார்கள்.
நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் ஜோடியாக அத்திவரதரை தரிசிக்க சென்றாலும் நயன்தாரா மட்டுமே முன்பாக நிற்க விக்னேஷ் சிவன் பின்னாடி பக்தரோடு பக்தராகதான் நிற்க முடிந்தது.
இதைவிட யாரை தரிசிக்க சென்றார்களோ அந்த அத்திவரதர் பின்னால் இருக்க அவருக்கு முன்பு நயன்தாரா பக்கத்தில் அர்ச்சகர்கள் பலரும் நின்று போட்டோ எடுத்து கொண்ட நிகழ்வும் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் அத்திவரதர் முன்பு தரையில் அமர்ந்து தரிசித்தார். நயன்தாராவிடம் போட்டோ எடுத்து கொண்ட எந்த அர்ச்சகர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அத்திவரதரை பின்னுக்கு தள்ளி போட்டோ எடுத்தது போல தெரியவில்லை.
சுமார் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்தாலும் நயன்தாரா தரிசித்த போட்டோதான் இணையத்தில் விவாத வைரல் ஆனது.

எது எப்படியோ 40 ஆண்டுகால சரித்திரத்தில் நயன்தாரா ஸ்ட்ராங்காக இடம் பெற்று விட்டார் என்பது மட்டும் உறுதி.
குளத்தில் இருந்து எழுந்த அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் போக போகிறார். அடுத்த தரிசனம் 2059ல் தான்.
