
மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்ததும் உடனடியாக சிவா இயக்கத்தில் புதிய படத்துல நடித்து வருகிறார் ரஜினி.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உட்பட பலர் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் 169-வது படமாக தயாராகும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினி நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்று ரஜினி ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது ரசிகர்கள் போட்டியிடவும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. அதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் ரசிகர்கள் போட்டியிடக் கூடாது என்று அறிவித்து உள்ளார். தனது பெயரையோ படத்தையோ யாரும் பயன் படுத்த கூடாது என்றும் அறிவித்து இருக்கிறார்.
அதே நேரம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம்தான் வருகிறது. எனவே அதற்கு முன்பாக சில படங்களில் நடிக்க ரஜினி திட்டமிட்டு உள்ளார்.
