வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

 

சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டம்!

தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக் டப்பிங் யூனியன் தேர்தல்தான். நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுகிறார். சின்மயி அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர் டப்பிங் யூனியன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்துள்ளார்.

ஏற்கனவே ராதாரவி டப்பிங் யூனியனை தனது சொந்த அலுவலகம் போல பயன்படுத்தி பல வகையில் பண முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினாலும் அப்படி குற்றம் சுமத்தியவர்களையே சங்கத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார் ராதாரவி.

பொதுக்குழுவிலும் சங்கத்துக்கு தொடர்பில்லாத அடியாட்களை வைத்துக் கொண்டு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதபடி கூட்டத்தை நடத்தி முடித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நடிகர் சங்க நில மோசடியில் எப்படியும் தான் கைது செய்யப்படுவோம் என்ற சூழலில் தான் தன் மீதான மோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவில் ஐக்கியமானார் ராதாரவி.

அதோடு தன்னை பாஜகவில் தனியாக காட்டிக் கொள்ள தன் தலைமையின் கீழ் அப்போது செயல்பட்ட டப்பிங் யூனியனில் திடீரென இந்தி சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள் நடத்தினார். அதற்கு பாலிவுட்டிலும் டப்பிங் கலைஞர்கள் போய் பணியாற்ற பயன்படும் என காரணம் கூறினார் ராதாரவி.

ஆனால் அந்த இந்தி வகுப்பில் மொழி கற்றுக் கொண்டு ஒரு டப்பிங் கலைஞரும் எந்த இந்தி படத்திற்கும் போய் பணியாற்றினார்களா என்பது ராதாரவிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தெலுங்கு அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் தான் ஒரு தெலுங்கர் என கூறியதோடு தமிழ் மக்களை மிக அவதூறான வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளாக சலுகைகளுக்காகவும், வசதி வாய்ப்புகளை அனுபவிக்கவும் மட்டுமே தமிழ் மீது பற்று கொண்டவர் போல ராதாரவி நாடகமாடியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் தான் இந்த தேர்தல் வந்துள்ளது.

தமிழ் மொழியை விட வேறு மொழிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு நபர், அதிலும் நில மோச்டி உட்பட பல பண மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய ராதாரவி எப்படி தமிழ சினிமா டப்பிங் யூனியன் தலைவராக நிற்கமுடியும் முன்பு இதெல்லாம் தெரியாது இப்போது அவரே தான் ஒரு தெலுங்கர் என சொன்ன பிறகு அவரை வெற்றி பெற விடமாட்டோம் என்ற எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இத்தனை எதிர்ப்புகளை மீறி வழக்கம் போல தன் அதிகார பலத்தால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்திருந்த ராதாரவி ஆசையில் திடீரென சின்மயி ரூபத்தில் தடை விழுந்தது. போதா குறைக்கு சின்மயிக்கு ஆதரவாக ராதாரவியை எதிர்த்து நாசரும் களம் இறங்கியதால் ராதாரவி அணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுபோன்ற சூழலில் நேர்மையாக தேர்தல் நடந்தால் கண்டிப்பாக சின்மயி வெற்றி பெறுவார். ராதாரவி படுதோல்வி அடைவார் என வெளிப்படையாக தெரிந்ததால் தேர்தலில் சின்மயியை நிற்க விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடந்தது. அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தபோது பல தடைகளை ராதாரவி அணியினர் செய்து பார்த்தனர்.

இதையெல்லாம் மீறி சின்மயி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பெறப்பட்ட மனுக்களை 4ம் தேதி, 5ம் தேதி சரிபார்க்கிறார்கள். 5ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் சின்மயி பெயர் இல்லை என்பதால் அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ராதாரவிக்கு ஆதரவான சிலர் சத்தமில்லாமல் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சின்மயி தான் நீக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கியுள்ளார்.

அப்படி இருக்க சின்மயி மனுவை இந்த காரணம் கொண்டு தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தால் அவர் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகலாம்.

சின்மயியை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்து விட்டால் மீண்டும் தலைவர் பதவியை பிடித்து விடலாம் என ராதாரவி கணக்கு போடுகிறார். ஒரு வேளை தேர்தலில் தோற்றால் தன் மீதான மோசடி வழக்குகள் தனக்கு பாதகமான சூழலை உருவாக்கி விடும் என்றும் ராதாரவி அச்சப்படுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.

அதோடு மட்டுமல்லாமல் தன்னை எதிர்த்து சின்மயி அணி சார்பில் மனுத்தாக்கல் செய்தவர்களை “அன்பாக” பேசி மனுவைவாபஸ் வாங்கும் முயற்சிகளும் ஒரு பக்கம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தால் தேர்தல் நாள் அன்று சங்கத்துக்கு தொடர்பில்லாத பலரை உள்ளே நிறுத்தி தனக்கு எதிரானவர்களை ஓட்டு போட விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கலாம் என்கிறது ராதாரவியின் குணம் தெரிந்த நண்பர் வட்டாரம்.

இதையெல்லாம் பார்க்கும் போது டப்பிங் யூனியன் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதே நேரம் தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமான முறையில் நடத்துவார் என நம்புகிறது சின்மயி தரப்பு.

– கோடங்கி

828 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன