வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

 

 

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு

இலங்கையின் அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபச்சே கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார்.

பின்னர் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, பரஸ்பர வர்த்தம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா-இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து நானும் இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. எனவே பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இலங்கை போலீஸ் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அந்த நாட்டு மக்கள் மீது மட்டுமின்றி ஒட்டு மொத்த மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இலங்கையிலும் இந்திய பெருங்கடல் பகுதியிலும் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இலங்கையில் நல்லிணக் கத்தை ஏற்படுத்துவது பற்றியும், தமிழர்கள் பிரச்சினை குறித்தும் நாங்கள் திறந்த மனதுடன் பேசினோம். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சம உரிமை மற்றும் மரியாதையுடன் வாழவேண்டும். அமைதியாக வாழ்வதுடன், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய இந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தியா 48 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்து உள்ளது. மேலும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மீனவர்கள் பிரச்சினை குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். இது இரு தரப்பு மக்களின் வாழ்வாரத்தையும் பாதிக்கும் பிரச்சினை என்பதால், இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடங் கப்பட்ட விமான சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலங்கை தமிழ் மக்களுடனான தொடர்பு விரிவு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபக்சே, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

முன்னதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினரையும் நேற்று முன்தினம் ராஜபக்சே சந்தித்து பேசினார்.

346 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன