வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

 

 

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..

 

நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது…

நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.

 


நடிகர் விஜய் சேதுபதி பேசியது…

எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்.

இயக்குநர் விக்ரமன் பேசியது…

சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும். வாழ்த்துகள்.

நடிகர் சமுத்திரகனி பேசியது…

நடிகர் போஸ் வெங்கட் சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். “கன்னி மாடம்” நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்.

நடிகர் பரத் பேசியது….

நானும் போஸ் வெங்கட் அவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களை பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். “கன்னிமாடம்” தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் லியோனி பேசியது…

தமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றி படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் ரிக்‌ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள் மீது உள்ள அன்பில் அவர்களை பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.


நடிகை காயத்திரி பேசியது…

போஸ் வெங்கட் அவர்களுக்கும் ஹஷீர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். எனக்கு ஒரு அற்புதமான கதாப்பத்திரத்தை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஹரி சாய் பேசியது …

இயக்குநர் போஸ் வெங்கட் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. நாங்கள் முழு ஈடுப்பாட்டுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு இப்படத்தின் பாடல்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் கூறியதாவது …

நானும் போஸ்வெங்கட் சாரும் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோ வைத்து படம் எடுப்பதாக சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு நாயகன் வாய்ப்பு தந்தார். எனது நெடுநாள் கனவு நனவாகியிருக்கிறது. “கன்னி மாடம்” உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…

முதல் முறை போஸ் வெங்கட் போனில் இந்தக்கதை பற்றி சொன்னபோதே, என்னை ஈர்த்துவிட்டது. உடனடியாக நான் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்தேன். மறு நாள் எனக்கு முழு கதையையும் கூறினார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பாக இருக்குமென தோன்றியது. போஸ் வெங்கட் அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வருவார். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

ஒளிப்பதிவாளர் இனியன் கூறியதாவது….

இப்படம் சின்ன பட்ஜெட்டில் வெகு திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை மிகவும் பரபரப்பாக இருந்த போது தயாரிப்பாளர் ஹஷீர் இருந்தார் அவரை யார் எனத் தெரியாமல் வேகமாக ஒதுங்கி போகச் சொல்லி சத்தமாக சொன்னேன். அவரும் ஒதுங்கி போய்விட்டார். பின் தான் அவர் தயாரிப்பாளர் என்பதே தெரிய வந்தது. அந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயாரிப்பாளர் மிக இயல்பான சுபாவமுடையவர். படக்குழுவினருடன் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். அவரின் படத்தில் எதிரொலித்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

Rooby Films தயாரிப்பாளர் ஹஷீர் பேசியதாவது…

போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். “கன்னி மாடம்” தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.

744 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன