சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

 

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாலை நிலவரப்படி, இந்தியாவிலும் 34 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுதும் படுவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரித்தி சூடன், மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜிவ் கவுபா மற்றும் உள்துறை, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆகிய முக்கிய துறைகளின் முதன்மைச் செயலாளர்கள்
இன்றைய ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.

இந்நோய் மேலும் அதிமாக பரவிடாத வகையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனைகள், மற்றும்  தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும்சிறப்பு சிகிச்சை வார்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

786 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன