புதன்கிழமை, மே 15
Shadow

திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

 

திமுகவை பொறுத்தவரை கட்சித் தலைவர் பதவிதான் முதன்மையானதாக இருந்தாலும்  பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும்.
1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் நீடித்து வந்த அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த  பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள கட்சியின்  பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் ஸ்டாலின் நிழலாக எப்போதும் அவரோடே இருந்து மிக முக்கியமான நிகழ்வுகளில் அதிரடியாக செயல்படும் ஆ.ராசாவும் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தெரிகிறது.

துரைமுருகனை போட்டியின்றி தேர்வு செய்து அறிவிக்க ஆலோசனைகள் நடக்கிறதாம்.
தி.மு.க.வில் தற்போது கிளை கழக உள்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. அன்பழகன் இறந்ததால் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்தல் நடை பெறும்போது அனைத்து பதவிகளையும் நிரப்பி, பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படுமா? அல்லது அதற்கு முன்பே அறிவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் முழுவதும் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது. இதனால் கட்சி ரீதியான பணிகள் எதுவும் பாதிக்க வாய்ப்பு இல்லை.
துரைமுருகன் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டால் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி ஆ.ராசாவுக்கு வழங்கப்படலாம்  என தெரிகிறது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் கட்சியினர் சோர்வடையாமல் பணியாற்றி வெற்றி பெறும் வகையில் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கேற்றார்போல கட்சிப் பதவிகள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.
திமுகவை மிகவும் பாதித்த 2ஜி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா தானே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் வாதாடி வென்றதோடு மீண்டும் நீலகிரி தொகுதி மக்களால் எம்பி ஆக தேர்வானது மக்கள் மத்தியில் திமுகவுக்கும் குறிப்பாக ஆ.ராசாவுக்கும் பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1,060 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன