வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

 

பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-
கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கமாக அதை தெரிவித்தார். அதனுள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார்.

அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு இருக்கிறது. அதைத்தான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெளிவாக சொன்னார். அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை.


தமிழ்நாட்டில் ஒருவர் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழகத்தில் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அனைவருமே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். நானும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறேன். நீங்களும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நோய் வருவது இயற்கை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஏதோ ஒரு ரூபத்தில் அவ்வப்போது அனைவருக்கும் நோய் வரும்.
ஆனால் இந்த நோயை பொறுத்தவரைக்கும், இந்த கொரோனா வைரஸ் ஒரு அபாயகரமான நோய் என்று உலக நாடுகளிலிருந்து செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 136 நாடுகளில் பரவி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே இதை வைத்து தான் அச்சப்பட்டு கொண்டு இருக்கிறோம். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் இந்த அவையிலே தெரிவித்தார்கள். அதற்குண்டான முழு விளக்கத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

இதில் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை. ஆகவே, சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும், உங்களுக்கு பரிசோதனை வேண்டுமென்றால், உங்களை பரிசோதிப்பதற்கும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அரசு தயாராக இருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல, நாம் சட்டமன்றத்திற்கு உள்ளே வருகின்ற போது கூட, அனைவரையும் பரிசோதனை செய்து தான் அனுப்புகிறார்கள் என்பதையும் இந்த அவைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
கொரோனா வைரஸ் நோய் குறித்து என்னுடைய தலைமையில், மூத்த அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், ரயில்வே துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டு அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
மேலும், கொரோனா வைரஸ் நோய் குறித்து மத்திய அரசால் அளிக்கப்படும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பரிசீலித்து, அம்மாவின் அரசால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக் குழு (Task Force) ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

இச்சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.

315 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன