
கொரானா சமூக பரவல் ஆகி 3வது கட்டத்துக்கு போக கூடாது என போராடி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
உயிர்க்கொல்லி கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
தமிழகம் கொரானா வைரஸ் பாதிப்பில் 2-வது நிலையில் உள்ளது. இந்த 2-வது நிலையுடன் கொரானா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது
கொரானா வைரசின் 3-வது கட்டம் என்பது சமூக பரவலாகும். சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டால் கொரானா வைரசை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்.
ஆகையால் தமிழகத்தில் கொரானா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தீவிரமாக போராடி வருகிறோம்.
கொரானா வைரசை தமிழகத்தில் வேகமாக பரவுவதை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை ஒரே ஒருவருக்குத் தான் கொரானா வைரஸ் பாதிப்பு எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. மற்ற அனைவரது நோய் பரவலையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளோம்.
தற்போது கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் வாழும் இடங்களில் இரட்டிப்பு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக யாருக்காவது கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உதவியாக இருக்கும்.
பிப்ரவரி மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் தீவிர விசாரணைக்கும், கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சாதாரண நிலையில் இருந்தாலும் 28 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர மருத்துவ பரிசோதனை காரணமாக கொரானா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரானா வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால் நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவும் வேகம் தடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கைகள் தவிர முன்எச்சரிக்கையாகவும் தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஓமந்தூரார் மருத்துவமனை கொரானா வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது.
அதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசு செய்துள்ள சிறப்பான மருத்துவ திட்டங்கள் காரணமாக கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதித்தவர்களில் ஒருவர் கூட தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. சென்னை பம்மலில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட 73 வயது பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நன்றாக குணமாகி வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை எத்தகைய சூழ்நிலை வந்தாலும் அவை எதிர் கொள்ள தயாராக உள்ளோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நீண்டகால நடவடிக்கையாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசிடம் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
