Saturday, June 6
Shadow

முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை ! அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!

445 Views

 

 

முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை !
அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!

கொரானா என்ற கொடிய உயிர்க்கொல்லி அரக்கனால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுதும் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எல்லா தொழிலும் முடங்கி உள்ளது.

பொழுதுபோக்கு துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழ் திரையுலகமும் முடங்கி தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் திரைத்துறை தொழிலாளர்களின் கூட்டமைப்பான பெப்சிக்கு உதவி செய்யும்படி அதன் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்று ரஜினிகாந்த் 50 லட்சம், அஜீத் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், சூர்யா-கார்த்தி, சிவகார்த்திகேயன் தலா 10 லட்சம் என பலரும் நிதி உதவி அளித்தனர். அதோடு தயாரிப்பாளர் தாணு, நடிகர் ஜீவா உட்பட பலரும் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் வழங்கினார்கள்.

இந்த நிலையில் வந்த நிதி பெப்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க போதாமல் இருக்கிறது. எனவே இன்னும் நிதி வேண்டும் என அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி இரண்டாம் முறையாக வேண்டுகோள் விடுத்தார்.

அப்படி கிடைத்த நிதியை தவிர அரிசி உள்ளிட்ட பொருட்களை மட்டும் பெப்சியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்படி டப்பிங் யூனியனுக்கு வழங்கப்பட்ட 300 மூட்டை அரிசியை அதன் தலைவர் ராதாரவி முறைகேடாக தன் விருப்பத்தின் பேரில் உறுப்பினர் இல்லாதவர்களுகெல்லாம் கொடுத்து மோசடி கணக்கு காட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நிலைமை இப்படி இருக்க… ஏற்கனவே இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தும் கிடைத்த தொகை சம்மேளனத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்க போதுமானதாக இல்லை என்ற நிலையில் இன்று திடீரென பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிவிப்பு வெளியிட திரைத்துறையை சேர்ந்த குறிப்பாக நன்கொடை கொடுத்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு காரணம், முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி சார்பில் 10 லட்சமும், 25 ஆயிரம் உறுப்பினர்கள் சார்பில் தலா ஒரு ரூபாய் கண்க்கிட்டு 25 ஆயிரமும் சேர்த்து 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு நேரில் அளிக்கப் போவதாக கூறியதுதான்.

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்ததை தவறாக சொல்லாவிட்டாலும் ஏற்கனவே திரைத்துறை தொழிலாளர்கள் மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பதே தெரியாமல் விழி பிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் திரைத்துறை சார்ந்த பலர் திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக என்று கொடுத்த தொகையில் இருந்து 10 லட்சத்து 25 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கும் ஆர்.கே.செல்வமணி முடிவு அதிகார துஷ்பிரயோகம் என்று கடுப்பாகி உள்ளனர்.

அதோடு, முதல்வர் நிவாரண நிதி கொடுப்பவர்கள் நேரில் வர வேண்டாம் வங்கி மூலம் அனுப்பி வைக்கலாம் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.கே செல்வமணி தான் நேரில் போய் நிதி அளிக்கப்போவதாக கூறியதும் தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்ளும் ஒரு நடவடிக்கை என்றே விமர்சிக்கப்படுகிறது.

ஆர்.கே.செல்வமணியின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால் பெப்சிக்கு நன்கொடை தரலாம் என யோசித்த பலரும் நேரடியாக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக திரைத்துறையில் நன்கொடை கேட்டு இரண்டு முறை வேண்டுகோள் விடுத்த ஆர்.கே.செல்வமணி தன் சார்பில் ஒரு ரூபாயும் இதுவரை நன்கொடையாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருக்கும்போது யாரோ கொடுத்த அதிலும் தொழிலாளர்கள் நலனுக்காக கொடுத்த நிதியை இவர் நன்கொடையாக கொடுப்பது முறையற்ற செயல் என்றும் இதில் வெற்று விளம்பர யுக்தி மட்டுமே இருப்பதாக பெயர் சொல்ல விரும்பாத பெப்சி நிர்வாகிகள் பலரும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *