
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?
கொரானா பரவலை தடுக்க நாடு முழுதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிப் போய் பலகோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருவதால் பல மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடித்து அம்மாநில அரசுகள் அறிவித்து விட்டது.
அதே நேரம் தொடர் ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கிப் போனதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தார்கள்.
அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அப்படி செய்ய தவறினால் கொரானா வைரஸ் பலிகளை விட பட்டினிச்சாவு அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்தார்கள்.
இதனால் மீண்டும் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீடிக்க மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகிறது.
அதே நேரம் நாடு முழுதும் கொரானா பாதிப்புக்கு ஏற்ப மாநிலங்களை பிரிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அதன்படி வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களை சிவப்பு மண்டலமாகவும், பாதிப்பு குறைவான மாநிலங்களை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத மாநிலங்களையும், மாவட்டங்களையும் பச்சை மண்டலங்களாக பிரிக்க திட்டம்.
சிவப்பு மணடலமாக பிரிக்கப்படும் மாநிலங்களில் ஊரடங்கு தொடரும் என்றும் இப்போது உள்ள அதே நடைமுறைகள் தொடரும் என்று கூறப்படுகிறது.
ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்படும் மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும். அந்த மாநிலத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பச்சை மண்டலமாக பிரிக்கப்படும் மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஷாப்பிங் மால்கள், அரங்குகள் திறக்க அனுமதி இருக்காது.
மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு போக்குவரத்து இருக்காது.
குறிப்பாக ரயில் போக்குவரத்து முற்றிலும் இருக்காது என கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புகளை 14ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பார் என கூறப்படுகிறது.
