
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
உலகம் முழுதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான விரிவான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரானா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும், ஊரடங்கின்போது மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிவாரணங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
