
தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது.
இந்த சூழலில் திரைத்துறையை மட்டுமே நம்பி உள்ள பலரும் வேலை இல்லாமல் பெரும் சிரமத்தில் வாழ்வாதார சிக்கலில் உள்ளனர்.
திரையுலகின் மிகப் பெரிய கூட்டமமைப்பான பெப்சிக்கு பலரும் நிதி உதவி, பொருள் உதவிகள் அளித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கமும் தன் உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.
தயாரிப்பாளர் சங்கமும், கில்டு சங்கமும், திரைத்துறைக்கும் ஊடகத்துறைக்கும் பாலமாக இருக்கும் பி.ஆர்.ஓ.சங்கமும் தன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்து வருகிறது.
திரைத்துறை பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் மூலமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்படி பி.ஆர்.ஓ.சங்கத்தில் ஏதோ ஒரு பதவியில் இருக்கும் ராமானுஜம் என்கிற நபர் பிரபலமான ஒரு இணைய தளத்தில் ப்ரீலான்சராக இருக்கிறார்.

இவர் பாதிக்கப்பட்ட பி.ஆர்.ஓ.சங்கத்திற்கு நிவாரண உதவி வழங்குவதாக் பிரபல திரைப்பட வினியோகஸ்தர் மதுரை அழகரிடம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி இருக்கிறார்.
அதோடு தனது வசூலை நிறுத்திக் கொள்ளாமல் கஷ்டப்படும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அதே வினியோகஸ்தர் அழகரிடம் ரூபாய் ஒரு லட்சத்தை ரொக்கமாக வாங்கி இருக்கிறார். அடுத்த வசூலாக நெல்லையை சேர்ந்த வினியோகஸ்தர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறார்.
இப்படி வசூல் செய்த நிதியை இதுவரை எந்த நலிவடைந்த சினிமா பத்திரிகையாளருக்கு கொடுத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
அதோடு, அவர் அங்கம் வகிக்கும் சினிமா பி.ஆர்.ஓ., சங்கத்திற்கு கொடுப்பதாக வாங்கிய 50 ஆயிரமும் அந்த சங்கத்திற்கு போய் சேரவில்லை. இது குறித்து அந்த சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது அப்படி எந்த நிதியும் வரவில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.
இந்த கொரானா நிவாரண வசூல் விவரங்கள் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது தெரிந்ததும் உடனடியாக சில வாட்ஸ் அப் குழுக்களில் “சிரமப்படும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்ய ஒருவர் விரும்புகிறார். உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று ஒரு பதிவை போட்டு அவருடைய செல்போன் எண்ணை பதிவிட்டிருக்கிறார்.
இந்த சினிமா துறையில் முழு நேர சினிமா செய்தியாளர்களாக பல ஆண்டுகளாக எல்லா திரைத்துறை நிகழ்ச்சிகளுக்கும் வருவது சுமார் 250 பேர்.
இதில் தினசரி செய்தியாளர்களுக்கு என்று ஒரு அமைப்பு உள்ளது.
இது தவிர திரைத்துறை செய்தியாளர்களுக்கு என்று மேலும் இரண்டு அமைப்புகள் இருக்கிறது.
இந்த இரு அமைப்புகளிலும் இணையதளங்கள், யூடியூப் நடத்துகிறவகள், ரேடியோ, மாத, வார இதழ்களில் பணியாற்றுகிற்வர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
அதே நேரம் சொந்தமாக நிறுவனங்கள் நடத்தும் சிலர் மட்டுமே எந்த அமைப்பிலும் இல்லாமல் இருக்கிறார்கள்.
சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்தந்த சங்கங்களே நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
உண்மை இப்படி இருக்க நலிவடைந்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்வதாக சொல்லி திரைப்பிரபலங்கள் பலரிடமும் இத்தனை லட்சங்களை ஒரு சினிமா பி.ஆர்.ஓ.வசூல் செய்திருப்பது அவர் அங்கம் வகிக்கும் சங்கத்திற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும் இந்த கொரானா வசூல் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு “வசூல் வேட்டையில் சினிமா சங்கங்கள்” என்று பொது வெளியில் பதிவுகள் போட்டதுதான் உச்சபட்ச காமெடி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி சினிமா செய்தியாளர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் கொரானா நிதி வசூல் நடக்கிறது. அப்படி எந்த நிதியையும் நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. எங்கள் பெயரை சொல்லி நிதி கேட்டால் விசாரித்து உண்மை தன்மை அறிந்து உதவி செய்யுங்கள் ” என பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையை இந்த கொரானா வசூல் ராமானுஜம் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டு “வசூல் வேட்டையில் சினிமா சங்கங்கள்” என்று பதிவு வெளியிட்டதுதான் கொடுமையின் உச்சம்.

எங்கே தனது வசூல் விவரங்கள் வெளியாகி விடுமோ என்ற அச்சத்தில் முன்பாகவே இப்படி பதிவு போட்டுவிட்டால் தவறை தட்டிக்கேட்கும் இவர்(ராமானுஜம்) சரியான நபர் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த நினைத்து இருக்கிறார்.
ஆனால், அந்த பதிவு போட்ட சில நாட்களில் அதே சினிமா பத்திரிகையாளர்கள் பெயரில் இவர் செய்த கொரானா வசூல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இப்படி கொரானா நிவாரண வசூலில் தனி நபர் ஈடுபட்டால் அது உண்மையான பயனாளிகளுக்கு போய் சேராது அதில் அதிக முறைகேடுகள் நடக்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.
இந்த கொரானா வசூல் செய்தியை பதிவிடும் நோக்கமும் யாரையும் குற்றபடுத்த வேண்டும் என்பதாற்காக இல்லை. அதே நேரம், இந்த ராமானுஜம் பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். அதனால் அந்த துறைக்கு வரும் அனைத்து சினிமா செய்தியாளர்களையும் தெரியும். அதோடு, சினிமா பி.ஆர்.ஓ.சங்கத்தில் பதவியில் இருப்பதால் அனைத்து செய்தியாளர்களின் தொலைபேசி எண்கள் தெரியும். அப்படி இருக்க… உலகம் முழுக்க பார்க்கும் முக நூல் பக்கத்தில் இப்படி இவர் “உதவி செய்கிறேன் வாருங்கள்” என்று பதிவு போட்டதன் நோக்கம் என்ன என்பதும் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
ஒருவேளை இந்த சினிமா பி.ஆர்.ஓ. ராமானுஜம் உண்மையில் தான் நடத்திய கொரானா நிதி வசூலை சேவை உணர்வோடு பாதிக்கப்பட்ட திரைத்துறை செய்தியாளர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் நிச்சயமாக பாராட்டலாம். இந்த உண்மை அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
– கோடங்கி
