
வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !
உலகெங்கிலும் கொரானா வைரசின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி பல லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது.
அனைத்து நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு எல்லா விமானங்களும் ஓய்வு எடுத்து வருகின்றன.
இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை திங்கள் கிழமை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது.
அதோடு, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா) கீழ் சென்றது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் -39.14 டாலர்கள் (மைனஸ்) என விற்பனை செய்யப்பட்டது. அதாவது கச்சா எண்ணெய்யை வாங்குபவர்களுக்கு விற்கிறவர்கள் பணம் கொடுத்து எண்ணெய்யை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நிலை.
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு குறைய காரணமாக கூறப்படுதவது:-
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு
கொரோனா காரணமாக பயன்பாடு குறைந்ததால் தேவையும் குறைந்து போனது.
உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதி இல்லாத நிலை.
கச்சா எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமல் இருப்பது.
கச்சா எண்ணெயின் விலை ஒரு நாளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வரலாற்றில் முதல்முறையாக இப்படி சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி சரிவை சந்தித்தாலும் நம்மூரில் பெட்ரோல் டீசல் விலை குறையவும் இல்லை உயரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
