வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!

 

 

பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா ஆர்.கே.செல்வமணி!

கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸ் தாக்குதல் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ளது.

திரையுலகமும் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்தி விட்டது. வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவ பெப்சிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
இது தவிர பலர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள்.

பெப்சியில் அங்கம் வகிக்கும் சினிமா சங்கங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கிலோ அரிசி மூட்டைகளும், தலா 500 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணி தலைவராக வந்ததில் இருந்தே அவரை எதிர்த்து தேர்தலில் வேலை செய்தவர்களை புறக்கணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. அதோடு நிர்வாகிகள் கூட்டத்தில் எதிர் கேள்வி கேட்டதாக கூறி டெக்னீசியன் யூனியனையே பெப்சியை விட்டு நீக்கினார் செல்வமணி. இதனால் அந்த சங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட… கடும் எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலரை மட்டும் சேர்த்து புது அணியை ஏற்படுத்தி அந்த அமைப்பை பெப்சியில் செல்வமணி அங்கீகரித்ததாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து டெக்னீசியன் யூனியன் பொது செயலாளர் தனபால் பல மாதங்களாக போராடி வருகிறார்.

இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த பழைய கதை…

இப்ப கொரானா கொடூரத்தால் அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ பலரும் கொடுத்த உதவிகளை பெப்சி பிரித்து கொடுத்து வருகிறது.

ஏற்கனவே பல முரண்பாடுகள் இருந்தாலும் இதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவி வழங்குவதுதான் மனிதாபிமானம் மிக்க செயல்.

அதனால் எப்படியும் உதவி வரும் என காத்திருந்த தனபால் தலைமையிலான டெக்னீசியன் யூனியனுக்கு இன்றுவரை எந்த உதவியையும் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான பெப்சி நிர்வாகம் வழங்க வில்லையாம்.

அரிசி மூட்டைகளை கேட்கலாம் என்று பெப்சி சங்கத்திற்கு பல முறை நடையாக நடந்தும் தனபாலை விட்டு விட்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் எந்த உதவியும் தரப்படும் என்று பெப்சி நிர்வாகத்தில் இருக்கும் தலைவர் செல்வமணி ஆதரவாளர்கள் கண்டிப்பாக சொல்கிறார்கள் என்கிறார் தனபால்.

இதற்கிடையில் தனபால் டெக்னீசியன் யூனியனில் இருந்து பிரிந்து செல்வமணிக்கு ஆதரவாக இருக்கும் அமைப்புக்கு அரிசி முட்டைகள், நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரானாவை பொறுத்தவரை நல்லவர் கெட்டவர் ஆதரவாளர் எதிரணி என்று யாரையும் பார்த்து வருவதில்லை. அதே போல நிவாரண உதவிகளும் ஆள் பார்த்து ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்குவது என்பது சரியான தலைமைக்கு அழகில்லை.

எனவே உண்மையில் டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்கள் யாருக்காவது பெப்சி நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருக்கும் என்றால் உடனடியாக ஆர்கே.செல்வமணியே தலையிட்டு இந்த இடர்களை சரி செய்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்.

அதே போல தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யும் போது அதை விளம்பர படுத்தும் விதமாக புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்தால் நல்லது.

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரானா கொடூரத்தை ஒன்றிணைந்து ஒழிப்போம்.

– கோடங்கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன