
ஒருவேளை உணவுக்கே மக்கள் திண்டாடும் போது இப்படி வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க – குஷ்பு வேண்டுகோள்
கொரானா ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு திண்பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றனர்.
லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே நாட்டில் பலரும் போராடும் நிலை இருப்பதால், இது போன்ற தருணத்தில் கண்ணுக்கு கவர்ச்சியாக கவரும் விதமான உணவு வகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது.
ஏழை எளிய மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் கூட நமது பகட்டை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டாம் என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், விரும்பிய உணவு வகைகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் , அதை வேண்டாம் என்று நான் அறிவுறுத்தவில்லை.
அதே நேரம், உணவு வகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என நடிகைகளுக்கும், சமூகவலைதள ஆர்வலர்களுக்கும் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
