
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டருக்கே வராமல் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் வெளியானதும் திரையுலகில் பெரும் பரபரப்பு.
“அப்பாடா… பூனைக்கு ஒரு வழியாக மணி கட்டி விட்டார்கள்” என்று ஒருசாராருக்கு மகிழ்ச்சி.
அதே நேரம் இதுநாள் வரை எத்தனை கோடி முதல் போட்டு அல்லது கடன் வாங்கி படமெடுத்தாலும் இத்தனை ஷோ தான் தருவோம் என்றும், அப்படியே கையில் காலில் விழுந்து ஷோ வாங்கினாலும் 60-40, 70-30 என பர்சண்டேஜ் போட்டு, அப்படி ஓடிய படத்துக்கான ஷேர் தொகையையும் அத்தனை சீக்கிரம் தராமல் மாத கணக்கில் இழுத்தடித்து தயாரிப்பாளர்களை அலையவிட்டு தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த தியேட்டர் முதலாளிகளுக்கு இந்த டிஜிட்டல் ரிலீஸ் முடிவு பயங்கர ஷாக் ஆக்கி இருக்கிறது.
எந்த ஒரு தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் புதுசு புதுசாக வரும்போது அதற்கு தக்க தொழிலில் தங்களை மாற்றிக் கொள்கிறவர்கள் தொடர்ந்து அதே தொழிலில் வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்.
டெக்னாலஜியை ஏற்க மறுத்து குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிறவர்கள் கடைசிவரை தொழிலில் நிற்க முடியாமல் வேறு தொழிலுக்கு போய்விடுவார்கள். இது எல்லா தொழிலுக்கும் பொதுவானது.
பிலிம் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்ததும் சிலருக்கு பாதகம் ஆனாலும் பல நூறு படங்கள் உருவாக காரணமாகி ரிலீஸ் படங்கள் வாராவாரம் அதிகரித்தன.
அதே போல இப்போது சினிமாவை மெல்ல ஓரம்கட்டும் விதமாக வெப்சீரியஸ் சமீபகாலமாக சக்கை போடு போடுகிறது.
இப்படி ஒவ்வொரு தொழிலிலும் புதுமைகள் வருவது இயல்பான ஒன்றுதான்.
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்…
யாருமே எதிர்பார்க்க முடியாதபடி உலகமே கொரானா என்ற கொடூர அரக்க உயிர்க்கொல்லி வைரஸ் காரணமாக முடங்கிப் போய் உள்ளது.
100 சதவீதம் பொழுதுபோக்கு துறை முடங்கி விட்டது. ஏற்கனவே எடுத்து முடித்து ரிலீஸ் தேதி அறிவித்த படங்களும், ரிலீஸ் தேதி நோக்கி ஓடிய படங்களும் அடுத்து என்ன செய்வது இந்த இடர் எப்போது நீங்கும் மீண்டும் இயல்பு நிலை எப்போது மாறும் என தெரியாமல் விழி பிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.
காரணம் பெரும்பாலான படங்கள் பைனான்ஸ் வாங்கியே தயாரிக்கப்படுகிறது. அப்படி வாங்கிய தொகைக்கு வட்டி வழக்கம் போல உயர்ந்து கொண்டே தான் இருக்கும். குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் போனால் வட்டி உயர்ந்து பட ரிலீசே கேள்விக்குறி ஆகிவிடும்.
இப்படி ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி இருக்கும் ஏராளமான படங்களே உதாரணம்.
அதோடு, கொரானா வைரஸ் பரவும் விதத்தை புரிந்து கொண்டவர்கள் அதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும்வரை தியேட்டர் பக்கம் வருவார்களா என்பது சந்தேகமே…

இதுபோன்ற சூழலில் மக்கள் டிஜிட்டலில் படம் பார்க்கும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 கோடி புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் நிறுவனங்கள் பெற்றதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.
ஆக கொரானா இடர் நீங்கி மீண்டும் இயல்பு நிலை திரும்பும்வரை டிஜிட்டலில் ரிலீஸ் ஆகும் படங்களை தடுக்க நினைப்பது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் ஏறிவதற்கு சமம்.
அப்படி டிஜிட்டலில் படத்தை ரிலீஸ் செய்தால் இனி உங்கள் எந்த படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என சூர்யா,ஜோதிகா, கார்த்திக்கு மிரட்டல் விடுக்கும் போக்கும் ஏற்புடையதே இல்லை.
இப்படி சொல்வதால் இவருக்கு தியேட்டர் முதலாளிகளின் கஷ்டம் என்ன தெரியும் என கேட்க நினைப்பவர்களுக்கு… ஒரு யோசனை… தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் எனபது குறித்து உறதியாக யாரும் சொல்ல முடியாது.
அதனால் ரிலீசுக்கு ரெடியான படங்களின் கடனுக்கான வட்டியை தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால் தயாரிப்பாளர்கள் ஏன் டிஜிட்டல் ரிலீசுக்கு போகப் போகிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர்கள் படம் தியேட்டர்களுக்கு ரிலீசுக்கு தேவைப்படும் அதே நேரம் அந்த படத்தை தயாரிக்க வாங்கிய கடனுக்கான வட்டியை இந்த இடர் நேரத்திலாவது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஏற்குமா என்றால், கற்பனையாக கூட அப்படி யோசிக்க மாட்டார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சொகுசு கப்பலாய் திகழ்ந்த திரைத்துறையில் வசதியாக பயணித்தவர்கள் இந்த கொரானா இடர் என்னும் உயிர்க்கொல்லி நோயால் உடைந்த கப்பலில் உயிர் பிழைக்க அல்லது எதையாவது பிடித்துக்கொண்டு மிதந்து கரையேற முடியுமா என தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படி பட்டவர்களுக்கு ஒரு மிதவை படகாக டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிகிறது போலும். வாங்கிய கடனுக்கும் வட்டிக்கும் வந்தவரை போதும் என படம் முடித்த தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் ரிலீசுக்கு திரும்புவதில் யாருக்கும் பெரிய பாதகம் ஏற்படப் போவதில்லை.
கொரானா இடர் நீங்கிய பிறகு இயல்பு நிலை திரும்பியதும் ரசிகர்கள் கண்டிப்பாக கூண்டில் இருந்து திறக்கப்பட்ட பறவையாக தியேட்டர்களுக்கு வருவார்கள் என நம்புவதுதான் வாழ்க்கை.
தியேட்டர்கள் அதிபர் சங்க நிர்வாகிகளான ரோகிணி பன்னீர்செல்வம் “டிஜிட்டல் ரிலீசுக்கு போனால் அடுத்ததாக வரும் படங்களுக்கு தடை போடுவோம்” என்கிறார். திருப்பூர் சுப்பிரமணியம் “தியேட்டர் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் கழித்தே டிஜிட்டலில் படத்தை வெளியிட வேண்டும்” என்கிறார்.
இவர்கள் இப்படி கூறிக் கொண்டிருந்தாலும் சூழலுக்கு ஏற்ப செய்யும் தொழிலில் மாற்றங்களை செய்து தொழிலை தக்க வைக்கும் வித்தை தெரிந்த பொன்மகள் வந்தாள் தயாரிப்பாளர் சூர்யா தான் எடுத்த முடிவிலிருந்து விலக மாட்டார் என்கிறார்கள்.
இது ஒரு தொடக்கம் தான்… பொன்மகள் வந்தாள் பட டிஜிட்டல் ரிலீஸ் வருவாய் இன்னும் பல படங்களை டிஜிட்டல் பக்கம் திருப்பும் என்றே தெரிகிறது.
பிரபல நடிகரின் படமும் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யலாமா என பேசி வருவது கூடுதல் தகவல். இதைத்தான் தனது விஸ்வரூபம் பட ரிலீசுக்கு செய்ய நினைத்தார் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– கோடங்கி
