
எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் யாரோ விஷமிகள், அமித்ஷா தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை மற்றொரு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர்
இதுகுறித்து அமித்ஷாவின் கவனத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர்.
இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறது. நாட்டின் உள்துறை மந்திரி என்ற வகையில், நான் இரவு நீண்ட நேரம் வரையிலும், எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இதில் கவனம் செலுத்தவில்லை.
இது என் கவனத்துக்கு வந்தபோது, இப்படி வெளியிட்டவர்கள் வேண்டுமானால் தங்கள் கற்பனை இன்பத்தை அனுபவிக்கட்டும் என அனுமதிக்க நினைத்தேன். அதன் காரணமாக நான் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் எனது கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களும், என் நலம் விரும்பிகளும் கடந்த 2 நாட்களாக தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்தனர். எனவே இன்று நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு நோயும் இல்லை.
இந்து மத நம்பிக்கைகள் படி, இத்தகைய வதந்திகள் ஒரு நபரை ஆரோக்கியம் ஆக்குகின்றன. எனவே இந்த வதந்திகளை பரப்பியவர்கள் இதை ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் சொந்த வேலையை மனதில் கொள்வார்கள், என்னையும் என் வேலையை செய்ய விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
என் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, விசாரித்த கட்சி தொண்டர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கும நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் மீது எனக்கு எந்த தவறான உணர்வுகளும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அமித்ஷா கூறி உள்ளார்.
