புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

 

 

கொரானா வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் அமைச்சர் பதவி பறிப்பு… 3 மாசம் சிறை…!

தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆக வேண்டாம்… இது நம்மூரில் இல்லை. வெளிநாட்டு விவகாரம்…

கொரானா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது.

கொரானா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரானா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரானா சிகிச்சையின் முக்கிய அங்கமான செயற்கை சுவாசக்கருவி எனப்படும் வெண்டிலேட்ரை ஸ்பெயினிடம் இருந்து வாங்க பொலிவியா முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 170 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு சுமார் 5 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒரு வெண்டிலேட்டருக்கு தலா 27 ஆயிரத்து 683 டாலர்கள் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டதாம். இந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் தலைமையில் நடைபெற்று பணமும் ஸ்பெயின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் உலக சுகாதார அமைப்பின் தரத்தின் படி இல்லை என்றும், தரம் குறைந்த இந்த வெண்டிலேட்டர் ஒன்றின் சந்தை மதிப்பு வெறும் 7 ஆயிரத்து 194 டாலர்கள் என்பதும் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு பொலிவிய அரசு வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்திருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் கண்டுபிடித்து செய்திகள் வெளியிட்டன.

இந்த தகவல் வெளியானதையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இதையடுத்து, வென்டிலேட்டர் கொள்முதலுக்கு தலைமை ஏற்ற சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்சின் பதவியை அந்நாடு அதிபர் உடனடியாக பறித்தார். மேலும், ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் மார்சிலே நவஜென்ஸ் வென்டிலேட்டர் வாங்குவதில் ஊழல் செய்தது நிரூபணம் ஆனது.


இதையடுத்து வென்டிலேட்டர் கொள்முதலில் ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்சுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த விவகாரத்தில் பொலிவியா முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் உள்பட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில நூறு வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் செய்த அமைச்சர், அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை, தண்டனை வழங்கும் ஒரு நாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கே மக்கள் உயிரோடு விளையாடும் பல விஷயங்களில் பல மில்லியன் டாலர் ஊழல் செய்து இன்னமும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1,384 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன