வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

 

 

தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள்.

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா…? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்? என்பதை எல்லாம் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து மிக அழகாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

படம் கோர்ட்டில் தொடங்கும் போதே படம் பார்க்கிற ஒவ்வொருக்கும் அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

தேவை இல்லாமல் கோர்ட்டில் வாதாடும் வக்கீல்கள் பேசும் வசனங்களில் கூட நறுக் தெறித்த பாணி…

ஜோதிகாவின் இடைவெளி டுவிஸ்ட் படத்துக்கு பெரிய பலம்…

சோகம்… ஆவேசம்… பரிதாபம்… அன்பு… அதிகாரம் என அனைத்திலும் மீண்டும் ஜோதிகா தன்னை நிரூபித்து இருக்கிறார்.

வரதராஜன் என்ற தொழிலதிபராக சில காட்சிகளே வந்தாலும் தியாகராஜன் மிரட்டுகிறார்.

வக்கீலாக வரும் பார்த்திபன் கதைக்கு அழகாகவே பொருந்துகிறார்.

நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் அவருக்கு உதவியாளராக வரும் பாண்டியராஜன், காவல்துறை அதிகாரியாக வரும் சுப்பு பஞ்சு இப்படி எந்த கதாபாத்திரங்களும் வீணாக இல்லை.

இயக்குனர் எடுத்த முதல் படம் போலவே தெரியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக திரைக்கதையை உருவாக்கி நிஜத்தில் இந்த நாட்டில் நடந்த பல அவலங்களை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லை என்பது எத்தனை வலி மிகுந்தது என்பதை படம் பார்க்கிற ஒவ்வொருவரும் உணரும் விதமாக படத்தை நகர்த்தி இருக்கும் இயக்குனர் பெட்ரிக்கின் துணிச்சலுக்கு ஒரு சபாஷ்.

பொன்மகள் வந்தால் படத்தில் குறையே இல்லையா என்று கேட்கிறவர்களுக்கு கண்டிப்பாக குறை இருக்கு… இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். அதற்கு பதில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனதுதான் பெருங்குறை.

மொத்தத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் அல்ல பாடம்!

– கோடங்கி

1,128 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன