வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்

 

வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்

சென்சார் இல்லாமல் OTT டிஜிட்டல் தளங்களில் ரிலீசாகும் தொடர்களால் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது .

திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டுமே வெளியான காலம் மாறி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய உலகில் டிஜிட்டல் தளங்களிலும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

தியேட்டரில் வெளியாகும் எல்லா படைப்புகளும் அரசின் தணிக்கைக்கு பிறகே ரிலீஸ் ஆகும்.

ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை அவசியமில்லை என்ற நிலையே இப்போது வரை உள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்களில் வெப்சீரிஸ் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரானா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கமுடியாத நிலை தற்போது நிலவுவதால் திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதால் ஓ.டி.டி. எனப்படும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைதளங்களின் வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க இந்த ஓ.டி.டி. தளங்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அவர் தணிக்கை சட்டத்தில் உள்ள பொதுப் பார்வையிடல் என்ற அம்சம் விரிவான விளக்கத்தை கொண்டிருக்காத நிலையில், இத்தகைய தனிப்பட்ட பார்வையிடல் பற்றிய திருத்தத்தை அதில் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஓடிடி தளங்களில் இடம்பெறும் அநாகரிகமான வசனங்களும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் அதைப் பார்ப்பவர்களின் மனதில் பாதிப்பை உண்டாக்குவதாகவும் கடிதத்தில் நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

355 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன