சனிக்கிழமை, மே 2
Shadow

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்…

 

 

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரானா பரவல் விவகாரம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசித்தார்.

வரப்போகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், கொரானா பரவல் மற்றும் லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

கூட்டத்தில் பேசிய எம்.பி.க் கள், லடாக் மோதல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரை கூட்டுமாறு மத்திய அரசை வற்புறுத்தியதோடு, தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் பேசுகையில், ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி மக்கள் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்துவதோடு, அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது இந்த கோரிக்கையை ஆலோசனையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர், கவரவ் கோகாய், ஆண்டோ அந்தோணி, குர்ஜீத் சிங் அவுஜிலா, சப்தகிரி சங்கர் உலாகா உள்ளிட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் வழிமொழிந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த கோரிக்கை குறித்து கூட்டத்தில் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஆகஸ்டு மாதம் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக காங்கிரஸ் காரிய கமிட்டி நியமித்தது.

இப்போது மீண்டும் ராகுல் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன