
கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முறை இந்தியாவில் தொடங்கியது!
உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோயை ஒழிக்க உலகம் முழுதும் போராடி வருகின்றனர். பல லட்சம் மக்கள் பலியான நிலையில் தடுப்பூசியை கண்டு பிடிக்க பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கி உள்ளது.
ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்று, அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகும்.
அங்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து 3 பேரை தேர்வு செய்திருந்தார்கள்.
அந்த 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று போடப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கி உள்ளது.
“இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொரானா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை வெற்றிகரமான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை தொடங்கி உள்ளது” என அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது.
ரோட்டக் பி.ஜி.ஐ.எம்.எஸ்.சில், மேலும் 14 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அதற்கான அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.
இதே போன்று பிற பரிசோதனை தளங்களிலும் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போட்டு பரிசோதிப்பது அடுத்த சில நாட்களில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
