வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

 

 

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.


இந்நிலையில், துறைமுக சேமிப்பு கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு சுங்கத்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டிருந்ததும், அந்த கடிதத்திற்கு எந்த உத்தரவு பிறப்பிக்கப்படாததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 750 டன் அளவுள்ள அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளுடன் சரக்கு கப்பல் பெய்ரூட் துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதில் இருந்த வேதிப்பொருள் பெய்ரூட் சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டது.

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருளின் ஆபத்தை உணர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பெய்ரூட் நீதிமன்றத்திற்கு 2014 முதல் 2017 வரையிலான கால இடைவெளியில் 6 முறை கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதங்களில் அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆபத்து நிறைந்த வேதிப்பொருள் என்றும், இதை ஏற்றுமதி செய்யவோ, மறுவிற்பனை செய்யவோ அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்கவோ அனுமதி தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் சுங்கத்துறையின் 6 கடிதங்களுக்கும் பெய்ரூட் நீதிமன்றத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சுங்கத்துறையின் கடிதங்களுக்கு நீதிமன்றம் எதேனும் உத்தரவு பிறப்பித்திருக்கும் பட்சத்தில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், பல கடிதங்களுக்கு பதிலளிக்காமல் தாமதம் நீதித்துறை அலட்சியத்தால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

183 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன