
கைலாச நாடு என சாமியார் நித்தியானந்தா ஏதோ விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள் பலர்.
ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு நாட்டை உருவாக்கி கரன்சி வரைக்கும் ரெடி இதே அறிவிக்க போகிறேன் என மீண்டும் அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நித்தியானந்தா.
ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடீரென வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் என தொடர் புகார்கள் வந்ததும் திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார்.
இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
அதன் பின் தனி நாடு உருவாக்கி விட்டார் அதன் பெயர் கைலாசா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. நித்தியும் தினமும் ஒரு வீடியோ போட்டு சமூக வலதள பக்கத்தில் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.
பிறகு திடீரென மவுனமாகி சத்தமில்லாமல் போனார்.
எங்கே நித்தியானந்தா என தேடிக் கொண்டு இருந்த நேரத்தில்
தற்போது அதிரடியாக மீண்டும் வந்துள்ளார் நித்யானந்தா.
அதிகாரப்பூர்வமாக தனது கைலாசா நாட்டை உருவாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கைலாச நாட்டுக்கு எப்படி வர வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், கைலாச நாடு எப்படி இருக்கும் என்பதையெல்லாம் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா கூறியதாவது, நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் அதை நல்ல காரியங்களுக்கு செலவிட தனியாக வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு தேவையான 300 பக்க அறிக்கையையும் உருவாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைலாச நாட்டிற்கு தனியாக பணம் அச்சிடப்பட்டு விட்டது எனவும் விரைவில் அதை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் உள்நாட்டு செலவுக்கு ஒரு பணத்தையும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு தனி பணத்தையும் உருவாக்கி உள்ளாராம்.
மேலும் கைலாசாவின் ரிசர்வ் வங்கி அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அடிபணிந்து தான் உருவாக்கி உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை எனவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அடுத்தகட்ட அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா.
புராணத்தில் ஞான பழம் கிடைக்கவில்லை என்பதற்காக முருகப்பெருமான் தாய் தந்தையிடம் கோபித்துக் கொண்டு “எனக்கென ஒரு நாடு , எனக்கென தனி மக்கள்” என்று சென்று விடுவார் என கூறியிருப்பார்கள்.
அதைப்போலவே தன் மீது புகார்கள், வழக்குகள் வந்ததும் நித்தியானந்தா நாட்டை விட்டு ஓடி தனி நாடு உருவாக்கி தன்னைத்தானே அதிபராக அறிவித்து கொண்டார். இப்போது ரிசர்வ் பேங்க் ஆப் கைலசா என கரன்சியும் ரெடியாம்… இன்னும் என்னென்ன பாக்கனுமோ…
