சனிக்கிழமை, மே 2
Shadow

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

 

உலகம் முழுவதும் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்றைய தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக  வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார்.

இதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள்  நடத்தப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.

உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த பெத்லஹேம் நகரில் கிறிஸ்மஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் திருநாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

அவர் பிறந்த பெத்லஹேம் நகரம் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது, இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அந்தவகையில், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதியான இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இன்று அந்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின சிறப்பு ஆராதானை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்தனர்.

அங்கு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த இராட்சத கிறிஸ்மஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

இது கிறிஸ்துவின் நிலம், அமைதியின் பூமி. இங்கு நிற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று ஒரு வெளிநாட்டு பயணி புல்லரிப்புடன் கூறினார்.

முன்னதாக நேற்று, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லஹேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை அணிந்த சிறுவர், சிறுமியர் வானவேடிக்கைகளை கண்டு களித்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறி, கேக் வெட்டி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆபிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்மஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

313 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன