
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு!
சென்னை மெரினாவில், ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள் உள்ளிட்டவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ, புகைப்படங்கள், அவர் படித்த நூல்கள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நினைவிடத்தை பராமரிக்க அரசு ரூ.9 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தை வரும் ஜனவரி மாதம் அரசிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரில் ஒருவரை வைத்து திறப்பு விழா செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
