
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்
பொதுவாக ஒரு கட்டிடம் கட்டப்படும் போது பல ஆண்டுகள் உறுதியாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கட்டுவார்கள். ஆனால் ஸ்வீடன் நாட்டில் உள்ள இந்த கட்டிடம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் கட்டப்படும் சில மாதங்களில் ஆற்றில் சென்றுவிடும் மீண்டும் அடுத்த ஆண்டு அதே போலக் கட்டப்படும்.
ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் என்ற கட்டிடம் தான் நாம் மேலே சொன்ன கட்டிடம். இந்த கட்டிடம் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் கட்டமைக்கப்படும். தொடர்ந்து 5 மாதங்கள் செயல்படும் இந்த ஓட்டல் மீண்டும் கரைந்து ஆறாக ஓடிவிடும். பின்பும் மீண்டும் அடுத்த குளிர் காலத்தில் கட்டப்படும். இவ்வாறாகக் கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து 32வது ஆண்டாக தற்போது இந்த ஓட்டல் மீண்டும் கட்டப்பட்டுள்ளது

இந்த ஓட்டல் அந்நாட்டின் டோர்னே என்ற நதிக்கரையின் ஓரம் கட்டப்படுகிறது. இதற்காக 2500 டன் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐஸ் கட்டிகள் குறிப்பிட்ட நதிக்கரையிலிருந்து எடுக்கப்பட்டு அக்டோபர் மாதம் கட்டுமான பணிகள் துவங்கும். இதைக் கட்ட ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள பல பனி சிற்ப கலைஞர்கள் இந்த பகுதிக்குச் சென்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அங்கு விருந்தினர்கள் தங்கப் பல அறைகள் அமைக்கப்படும். இந்த கட்டிடத்திற்குள் -5 டிகிரி குளிர் இருக்கும். ஒவ்வொரு ஆண்டு இந்த ஓட்டலில் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனர். இந்த ஓட்டல் வெளியிலிருந்தும் உள்ளே இருந்தும் பார்க்க மிக அழகாகத் தோற்றமளிக்கும். அக்டோபர் மாதம் கட்டப்பட்டு இந்த ஓட்டல் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் அதன் பின் இப்பகுதியில் வெப்பம் காரணமாகப் பனிகள் உருகத் துவங்கிவிடும். இந்த ஓட்டலில் ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.





