
அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தி போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்த தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய எம்எல்ஏ விஜயகுமாருக்கு சீட் கொடுக்காமல், பாமகவுக்கு ஒதுக்கியதால் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டங்களை நடத்தினர். அதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் லட்சுமி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு சீட் கொடுக்காமல், சந்திரனுக்கு சீட் கொடுத்தனர்.
இதனால் சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட பாஜ மாவட்ட தலைவர் ஓம் சரவணா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியான தமாகா வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலனை எதிர்த்து தூத்துக்குடி மேற்கு மண்டல பாஜ முன்னாள் தலைவர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் நெவளிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை எதிர்த்து முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதை தவிர ராமநாதபுரம், நெல்லை, சிவகங்கை மாவட்டங்களில் கடும் அதிருப்தி நிலவுவதால் கட்சிக்காரர்களை தவிர வேறு சில சமூக ஆர்வலர்களை சுயேச்சைகளாக களம் இறக்கியுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அக்கூட்டணி கட்சியினரே களத்தில் குதித்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. இதனால், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
