சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தார்கள்.

10 மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

மேலும் 12-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக படிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கலை -அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.

இதனால் பிளஸ்-2 தேர்வினை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் பாதுகாப்பாக இருக்காது என்று தேர்வு துறை கருதுகிறது.

அதனால் பிளஸ்-2 பொதுத் தேர்வினை மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது.

அதற்குள்ளாக பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்பதால், தேர்வினை தள்ளி வைக்கும் முடிவினை அரசு மேற்கொள்ள இருக்கிறது.

மேலும் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுவதால், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பள்ளி, கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் வழியாகவே நடத்தி முடிக்க முடிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து தேர்வு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 பொதுத் தேர்வினை மே மாதம் நடத்த வாய்ப்பு இல்லை. ஜூன் மாதம் நடத்தலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது.

10, 11 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் எவ்வாறு அளிப்பது என்பது குறித்து தேர்தல் முடிந்தபிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

170 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன