ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
முதலில் மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்கள பணியாளர்களில் 5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், நாள் பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 23 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆர்வமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 3,217 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1,900 சிறிய மருத்துவமனைகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

