வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா!

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. கடந்த 24-ந்தேதி பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 26 வயதான மணிப்பூரை சேர்ந்த அவர் 49 கிலோ உடல் எடை பிரிவில் 202 கிலோ (ஸ்னாட்ச் 87+கிளீன் அண்ட் ஜெர்க் 115) தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று மீராபாய் சாதித்தார்.  அதன்பிறகு கடந்த 5 நாட்களாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. குத்துச்சண்டை போட்டி மூலம் 2-வது பதக்கம் உறுதியாகி இருக்கிறது.

பெண்களுக்கான வெல்டர் வெயிட் பிரிவில் (உடல் எடை 64 முதல் 69 கிலோ வரை) கால் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் சீன தைபேயை சேர்ந்த நின்சின்சென்னை எதிர் கொண்டார்.
லவ்லினாவின் அபாரமான தாக்குதல் ஆட்டத்திற்கு சீன தைபே வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி   கணக்கில் (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றாலே வெண்கலப் பதக்கம் கிடைத்துவிடும். அதன்படி அவர் தற்போது வரை வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கிறது.

23 வயதான அசாமை  சேர்ந்த லவ்லினா தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதிக்கு முன்னேறி சாதித்து உள்ளார். அவர் கடந்த ஆண்டு கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் ஐரோப்பா சென்று அவரால் பயிற்சி பெற முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

லவ்லினா அரை இறுதியில் துருக்கியை சேர்ந்த பூசன்நாஸ் சுர்மெனிலியை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் லவ்லினா வெற்றி பெற்றால் வெள்ளி பதக்கம் உறுதி ஆகிவிடும். தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

குத்துசண்டை போட்டி யில் இன்று பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (லைட் வெயிட் பிரிவு) 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார். அவர் 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த சுதாபோர்ன் சீசன்டியிடம் தோற்றார்.

ஏற்கனவே குத்துச்சண்டையில் மனீஷ்கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆசிஸ் குமார், மேரிகோம் ஆகியோர் தோல்வியை தழுவி இருந்தனர். சதீஷ்குமார், பூஜா ராணி ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். அமித் பங்கல் நேரடியாக 2-வது  சுற்றில் விளையாடுகிறார்.

129 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன