திங்கட்கிழமை, மே 13
Shadow

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, 13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

13-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும். 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட் ஆன்லைனில் பெற்றவர்கள் காலை 9 மணி முதல் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவக்கூடிய நிலையில் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறி உடையவர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம்.
பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.ஆர். நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி உள்ளூர் பக்தர்களுக்காக தினமும் 5 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 10 நாட்கள் 50 ஆயிரம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 கவுண்டர்கள் திறக்கப்படுகிறது.

புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பல்வேறு ஊர்களில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் 30 ஆயிரம் லட்டுகள், கல்யாண உற்சவ லட்டுகள் 500-ம், வேலூரில் 5 ஆயிரம் லட்டுகளும், பெங்களூரில் 10 ஆயிரம் லட்டுகளும், ஐதராபாத், விசாகப்பட்டினத்திலும் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன