![]()
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆனால் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் பொது இடங்களில் அதிகளவில் கூடி வருகிறார் கள்.
குறிப்பாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு கூட்டம் அதிகரிக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர்.
ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர்.
கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மேல்மருவத்தூரில் இருந்து சென்றவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் கர்நாடகா பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி உள்ளனர்.
புத்தாண்டு தரிசனத்துக்காக வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கொரோனா கண்டறியப்பட்டு இருப்பது கர்நாடகா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 3 பஸ்களில் 2 பஸ்கள் மட்டுமே அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது.
அதில் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தான் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு பஸ்சில் இருப்பவர்கள் விரைவில் கர்நாடகா திரும்ப உள்ளனர்.

இவர்கள் மேல்மருவத்தூர் சென்று விட்டு மேலும் பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே அவர்கள் கர்நாடகா செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு அல்லது நாளை அந்த பஸ் கர்நாடகா சென்றதும் அதில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பரிசோதனையின் போது அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதன் மூலம் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய தகவல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள சுகாதார அலுவலர்களை உஷார் படுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் கோவிலில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதனையடுத்து இன்று மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் ஆய்வு நடத்தினார்.
அங்கு மருத்துவக் குழுவிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களை தனியாகக் கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும்.
அரசு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் முக கவசம் சமூக இடைவெளி போன்றவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேல்மருவத்தூர் கோயிலில் உள்ள ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், சிறுகடை வியாபாரிகள் ஆகியோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய என உத்தரவிட்டுள்ளார்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு நாள் தோறும் வரும் பகதர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டுகிறது.
இருப்பதால் வைரஸ் பாதிப்பு கண்டிப்பாக உயருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் சில நாட்கள் முழுமையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
