திங்கட்கிழமை, மே 13
Shadow

நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

 

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அம்பேத்கர் விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்துவருகிறது.

அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், இவ்விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தற்போது வழங்கப்பட்டுவரும் ஒரு லட்ச ரூபாய் என்பதை  ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இவ்விருதுகள் விருதுத் தொகையுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படும். வருகிற 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார்.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்கலைஞ்சியம் என தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படுபவர்.

திராவிட இயக்க வரலாலான நீதிக் கட்சி வரலாறு என்னும் நாவலை அது 1916-ல் தொடங்கப்பட்டது முதல் 1944-ல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது வரை இரண்டு தொகுதிகளாகப் படைத்துள்ளார்.

மேலும், திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச்சான்றோர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். இவரது எழுத்துப் பணியைப் போற்றும் வகையில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருது அப்போதைய முதல்வர் கருணாநிதி கரங்களால் வழங்கப்பட்டது

765 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன