
சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com
அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.
தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், “இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்,” என்றார்.
“உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம்.
எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், “இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகின்றன.
ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது தவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி.
இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்,” என்றார்.
புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும். அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.
