வியாழக்கிழமை, மே 16
Shadow

வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கமல்ஹாசன் -கோவையில் 2 நாட்கள் பிரசாரம்!

கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

கமல்ஹாசன் ஒரு மாதம் கோவையிலேயே தங்கி இருந்து, நகரில் இருக்கக்கூடிய முக்கிய பகுதிகளுக்கு ரோடுஷோ மூலமும், வீதி வீதியாக நடந்து சென்றும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கமலின் இந்த பிரசாரம் அப்போது மக்கள் மத்தியில் வித்தியாசமாகவும், மிக வரவேற்பையும் பெற்றது.

இருப்பினும் அந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கோவையில் தங்கியிருந்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போதும், எப்படி தோற்றோம் என்பதை மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் முடிந்த கையோடு, வார்டு மற்றும் பூத் வாரியாக ஆய்வு செய்தனர்.

அப்போது சில பூத்களில் மட்டுமே வாக்குகள் பின்தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பூத் கமிட்டிகளை வலுவாக்கி உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கினர்.

சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதிமய்யம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. சில மாதங்களுக்கு முன்பே அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் இறங்கிவிட்டனர்.

நிர்வாகிகள், தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளில் மக்கள் நல பணிகளை செய்து உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கோவை உள்பட சில மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.

பின்னர் தேர்தல் தேதி அறிவித்ததும் மீதமுள்ள பகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டு, அவர்களுக்கு ஆதரவு கேட்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார்.

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 77 வார்டுகளுக்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கவும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் கோவைக்கு வர உள்ளார்.

கோவையில் 2 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்ய உள்ளார்.

மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு, வார்டாக சென்று, தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், தாங்கள் வெற்றி பெற்றால் செய்யக்கூடிய திட்டங்களையும் மக்களிடம் விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.

ஆனால் எந்த நாட்களில் அவர் கோவையில் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

வரும் வாரங்களில் அவர் கோவையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கோவையில் கமல்ஹாசன் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

131 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன