
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
மேலும், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்,
சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும்,
நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல.
எனவே, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு,
இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும்.
இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 (இன்று) அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் ‘ என்று தெரிவித்துள்ளது.
