
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும்.
தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜய் ம்க்கள் இயக்கத்தினர் போட்டியிட சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள்,
என தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமா அல்லது தனித்து போட்டியிடுவதா என அலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கூறினர். அதனடிப்படையில் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள்ளோம். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தெரிவித்துவிட்டே திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பில்லா ஜெகன் கூறியுள்ளார்.
