
சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல வட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
அப்போது மேடையில் பேசிய அவர், கூறுகையில், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், குடும்ப அட்டைக்கு செல்பேசி தருவதாக அவர்கள் ஆட்சியில் சொன்னார்கள் செய்தார்களா? மகளிருக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவதாக சொன்னார்கள் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
கஜானாவை காலி செய்து விட்டு சென்ற பின்பும், பால் விலை குறைவு, மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு அதிமுகவிற்கு அருகதை இல்லை என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மதக்கலவரம் வந்துவிடக்கூடாது, மாணவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட தொலைநோக்குத் திட்டம் தான் திராவிட இயக்கம்
அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால் மத பிரச்சினைகள் தமிழகத்தில் இல்லை என்றார்.
மேலும் பாஜக போன்ற அரசியல் கட்சிகள், இளைஞர்கள் மத்தியில் மத ரீதியான வெறுப்பையும் காழ்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது கண்டிக்கதக்கது என கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றுவது தான் தேசப்பற்றா எனவும் அவர் கேள்வி எழுப்பிய அவர், இந்த தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.
