சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

தப்பித்த ”கள்ளன்” விரைவில் தியேட்டரில் பார்க்கலாம்!

 

கள்ளன்’ டைட்டில் விவகாரம்… தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’.

இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.இந்த நிலையில் குறிப்பிட்ட ஜாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும்,

சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊர்களிலிருந்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பெண் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.அதில், ‘ கள்ளன்’ படத்திற்கு சென்ஸார் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் ‘கள்ளன்’ படத்தைப் பார்த்த சென்ஸார் போர்டு,படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து U/A சான்றிதழ் கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்குறிப்பிட்ட பெண் தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று, வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.இதனைத் தொடர்ந்து உடனடியாக படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.

இயக்குனர் சந்திரா அவர்களிடம் கேட்டபோது…

“இந்தக் கதைக்கு இப்படியொரு டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் வைத்தோம். இது எந்த ஜாதியையும் முன்னிலைப் படுத்தி எடுக்கப்படவில்லை. இது முழுக்க ஆக்சன் த்ரில்லர் படம்.

வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருத்தன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று தடை போட்ட பிறகு வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். அது அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.

வாழ வழியில்லாமல் அவனும்,அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில் கடைசியில் ‘அறம்’தான் ஜெயிக்கும் என்பதைப் பரபரப்பாகச் சொல்லுகிற ஒரு கமர்ஷியல் படம்தான் இது.

எந்த இடத்திலும் ஜாதிய குறியீடோ,வசனமோ இருக்காது. யாருடைய மிரட்டலுக்கும் பயந்து டைட்டிலை மாத்துகிற எண்ணம் இல்லை.

இந்த விளக்கத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கூறிவிட்டோம். அதையும் தாண்டி எதிர்ப்பவர்கள் படத்தை பார்த்த பிறகு நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள்.

அதே சமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கை குழுவோ இந்த தலைப்பை மாற்ற சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.” என்றார் உறுதியாக!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன