புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

அண்டை நாடுகளில் 30 லட்சம் உக்ரேனியர்கள் தஞ்சம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

சிறிய நகரங்கள், முக்கியமான வர்த்தக பகுதிகள், தலைநகர் கீவ் என மும்முனை தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ளது.

தலைநகர் கீவில் 15 மாடிகள் கொண்ட குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.

தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்பு படை வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இதேபோல் பொடில் ஸ்கை, டர்னிட் ஸ்கை உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், கீவ் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மரியுபோல் நகரிலிருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

டொனெட்ஸ்க்-கில் உக்ரைன் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

கீவில் செவ்வாய் மாலை முதல் 36 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

போரினால் ஏற்படும உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிப்ரோ நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

போருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

397 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன