
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். சந்திப்பின் போது அவர் பேச்சிய பேச்சு பெரும்பரபரப்பையும் பலவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின.

கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
வருகிற 26 ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதத்தின் போது ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பான காலகட்டத்தில் தமிழருவி மணியனை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதே போன்று இன்றும் தமிழருவி மணியனை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரஜினிகாந்தால் தான் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். அவரும் கமலும் அரசியலுக்கு வந்தால் புதிய அரசியல் பாதை உருவாகும் என்று சொல்லி வருகிறார் தமிழருவி மணியன். ரசிகர்களை சந்திக்கும் நிலையில் ரஜினி நடத்தும் இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
388 Views
