ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

150 அடி உயர ராட்சத கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தி வந்தார்.

அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு விஜயகுமார் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பறக்க விடப்பட்டுள்ள தேசியக்கொடியின் அளவு 32 அடி அகலமும் 48 அடி நீளமும் ஆகும். இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மகாதனபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பிரின்ஸ் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திருவனந்தபுரம் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ராட்சத தேசியக் கொடி கம்பத்தில் பறக்க விடப்படும் தேசியக்கொடி வருடத்தில் 365 நாட்களும் இரவும் பகலுமாக 24 மணிநேரமும் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அது மட்டுமின்றி இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்கு வசதியாக தேசியக் கொடியை மின்னொளியில் மிளிர செய்வதற்காக ராட்சத மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன